இஸ்லாமிய கைதிகள் விடுதலை.. 10 வருஷமா என்ன பண்ணீங்க.. அதிமுக - திமுக மோதல்.. வெளிநடப்பு.! 

islam

இஸ்லாமிய கைதிகள் விடுதலை - கோரிக்கை

கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் 20 முதல் 25-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட ஆண்டு காலமாக இருக்கும் இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்கக்கோரி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது. 

இபிஎஸ் தீர்மானம் 

அதனடிப்படையில், நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று (அக்-10) இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுவிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜவாஹிருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி , ஜெகன் மூர்த்தி, பூமிதான் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்த தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கடந்த 14.2.1998-ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 இஸ்லாமியர்களுக்கு ஆயுள் தண்டனையும்,  20 இஸ்லாமியர்களுக்கு மற்ற குற்ற தண்டனைகளும் வழங்ப்பட்டன. அவர்கள் சிறையில் சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரையில் தண்டனை பெற்று விட்டனர்.

கடந்த 15.11.2022-ம் ஆண்டு தமிழக அரசு  வெளியிட்ட அரசாணையால் தான் 36 இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை செய்ய முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் 20 முதல் 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் அவர்கள் வயது மூப்பு, குடும்ப சூழ்நிலை , கருணை அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என இபிஎஸ் சட்டப்பேரவையில் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

இந்த  கோரிக்கைகள் மீது பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 9 உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களை முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறோம். ஆயுள் தண்டனை கைதிகளுக்கு முன் விடுதலை என்பது 10 முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் சிறை கைதிகளுக்கு வயது மூப்பு, இணை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிக்க நடவடிக்கை

இதனை ஒழுங்குபடுத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை 22.10.2021 அன்று அமைத்து அந்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த குழுவானது 264 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய பரிந்துரை செய்தனர். இதனை அடுத்து அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு 49 கைதிகள் விடுதலை செய்ய தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது . அதிலும் இஸ்லாமிய சிறை கைதிகள் உள்ளனர். 264 சிறை கைதிகளில் 49 சிறை கைதிகள் தவிர்த்து மீதம் உள்ளவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

திடீர் பாசத்திற்கு காரணம் என்ன?

அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் 39 இஸ்லாமியர்கள் விடுதலை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்றும், தருமபுரியில் ஒரு பேருந்தை எரித்து அதில் கல்லூரி மாணவர்களை கொன்றவர்களை அதிமுக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்தது என்றும், அதிமுகவுக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கலாமே என்றும், இஸ்லாமிய கைதிகள் மீது அதிமுகவின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன? என்றும் எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.  
  
அதையடுத்து, தொடர்ந்து பேச வாய்ப்பளிக்கவில்லை எனக்கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது. இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக்கோரிய அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் எப்போது ஈடேறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.