அன்புமணி கைதால் வெடித்த கலவரம் - கடலூர் மாவட்டத்தில் பேருந்து சேவை முடக்கம்

cuddlore bus service stop

என்.எல்.சி யை கண்டித்து போராட்டம் 

கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனமானது சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தியது. இந்நிலையில் அந்த நிலங்களில் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுரங்க பணிகளை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் விளை நிலங்களில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பயிர்கள் விளைந்திருக்கும் போது அதில், இயந்திரங்களை இறக்கி பயிர்களை அழிப்பதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அன்புமணி கைது

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

வெடித்த கலவரம் 

கலவரத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்தனர். பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவலர்கள் சிலரும் காயம் அடைந்தனர். தற்போது போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்விடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவையை நிறுத்த உத்தரவு

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாமக போராட்டம் வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு சேவையை நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.