இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்து..! 

Rishab Pant

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சென்ற கார் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. 

விபத்து ஏற்பட்டது எப்படி? 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஷப் பண்ட், இன்று அதிகாலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காலை 5:30 மணியளவில் ரூர்க்கி அருகே கார் சென்று கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் மோதியது. இதில் பலத்த சேதமடைந்த கார், தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது அருகில் இருந்தவர்கள் காருக்குள் இருந்த ரிஷப் பண்டை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில் ரிஷப்

ரிஷப் பண்டை பரிசோதித்த மருத்துவர் சுஷி நாகர் கூறும்போது, பண்டிற்கு நெற்றியிலும், மூட்டிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கார் தீப்பிடித்து எரிந்தாலும், ரிஷப் பண்டிற்கு தீக்காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக்கூறினார். முதல்கட்ட பரிசோதனையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவும், ஆபத்தான கட்டத்தை ரிஷப் பண்ட் கடந்துவிட்டதாகவும் மருத்துவர் சுஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

உத்தரகாண்ட் காவல் அதிகாரி

உத்தரகாண்டின் காவல்துறை இயக்குநர், அசோக் குமார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் நினைவு திரும்பிய பின் ரிஷப் பண்டிடமும் விசாரணை செய்தார். அப்போது ரிஷப் பண்ட், தான் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது அசதியில் தூங்கிவிட்டதாகவும், அதனால் எதிர்பாராதவிதமாக கார் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக ரூர்க்கி மருத்துவமனையில் இருந்து, தேராதுனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

கிரிக்கெட் வீரர்கள் ஆறுதல் 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லெட்சுமன் ட்விட்டரில், “ ரிஷப் பண்டிற்க்காக பிரார்த்திக்கிறேன், நல்லவேளையாக அவர் ஆபத்து கட்டத்தை கடந்துவிட்டார், அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்”என தெரிவித்துள்ளார். மேலும் பல கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ரிஷப் பண்டிற்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர்.