சிலிண்டர் விலையை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்.?

தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும் சிலிண்டர் விலை.. மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை.!

website post (1) (45)

வருடத்திற்கு இரண்டு முறை சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சிலிண்டர் விலை உயர்த்தப்படும்போதெல்லாம் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல்களும், எதிர்கட்சிகள் ஆளும்கட்சிகளைப் பார்த்து கேள்வி கேட்பதும் வழக்கமாகி விட்டது. 

2020-ம் ஆண்டு மே மாதம் விற்கப்பட்ட சிலிண்டரின் விலை ரூ. 569. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 710 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2021- ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 810 ரூபாயாகவும், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 915-ஆக உயர்ந்திருந்தது. மேலும், 2022-ம் ஆண்டு இரண்டு முறை உயர்த்தப்பட்டு, தற்போது 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,118 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் சிலிண்டர் விலை அடுப்பு எரிக்கும் பெண்களுக்கு வயிறு எரிய செய்திருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சமூகத்தில் 5 சதவீத அளவிற்குகூட வருவாய் இல்லாத மக்களிடத்தில், சமையல் எரிவாயு விலையை 58 சதவீதம் உயர்த்தியிருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் ஓர் உருளையின் விலை ரூ.1118.50 ஆக உயர்ந்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாத விலை. இது  அவர்களின் மாதச் செலவுகளை கடுமையாக பாதிக்கும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.710 ஆக இருந்தது. கடந்த 20 மாதங்களில்  ரூ.408,  அதாவது 58% உயர்ந்திருக்கிறது. மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

https://twitter.com/drramadoss/status/1631179060394233856?s=20

சமையல் எரிவாயு விலை கடைசியாக கடந்த ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் உலகச் சந்தையில் எரிவாயு விலை சரிந்திருக்கிறது.  இந்தியாவிலும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலை குறைக்கப்பட்டது. வீட்டுப்பயன்பாட்டுக்கான எரிவாயு விலையை குறைப்பதற்கு பதிலாக உயர்த்துவது நியாயமா?

சமையல் எரிவாயு விலை ரூ.1000-க்கும் மேல் இருக்கக் கூடாது. எனவே, சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, சமையல் எரிவாயு உருளைகளுக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.