ஆளுநர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் ஆர்.என்.ரவி.. வைகோ காட்டம்.!

Vaiko

அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளையும் மீறிவரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருக்கிறார். அக்கடிதத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்று ஆளுநர் ஆர். என். ரவி குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டமன்றத்திற்கு உட்பட்டுதான் இருக்கும்

ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளின் கீழ் வானளாவிய அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. அரசியல் சட்டப் பிரிவு 154 இன் படி, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும் , 154(2- ஆ) பிரிவு, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் அதன் சட்டம் இயற்றும் அதிகார அமைப்பான மாநில சட்டமன்றத்திற்கு உட்பட்டுதான் இருக்கும் என்று தெளிவாக கூறுகிறது.

இதுபோல்தான் ஆளுநரும் செயல்பட வேண்டும்

இதனை மத்தியப் பிரதேச அரசு எதிர் ஜெயின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்து இருக்கிறது. அதைப்போல சட்டப்பிரிவு 163, ஆளுநர் தமது பணிகளை நிறைவேற்றும் போது ஒரு சில விதிவிலக்குகள் தவிர அனைத்திலும் அமைச்சரவையின் உதவியுடனும் ஆலோசனையுடனும்தான் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பின் 42ஆவது திருத்த சட்டத்தின் மூலம் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் என்று பிரிவு 74 இல் திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல ஆளுநரும் செயல்பட வேண்டும் என்று பிரிவு 163 இல் உரிய திருத்தங்கள் செய்யப்படவில்லை.

ஆளுநரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும்

எனினும் பொதுவாக தமது அமைச்சர்களின் ஆலோசனைப்படி அல்லாமல் ஆளுநர் செயல்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்து இருக்கிறது. மிக முக்கியமாக அரசியல் சட்டப் பிரிவு 164 பிரிவு 1 இல் கூறப்பட்டிருப்பதை ஆளுநர் தன்னுடைய நடவடிக்கைக்கு ஆதாரமாக துணைக்கு அழைத்து இருக்கிறார். சட்டப்பிரிவு 164 முதல் விதி கூறுவதை கவனிக்க வேண்டும். “முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார்; மற்ற அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமிப்பார்; ஆளுநரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும்.”

முதலமைச்சரின் விருப்பம் தான் என்று சட்டம் சொல்லுகிறது

இதில் ஆளுநரின் விருப்பம் என்பது முதலமைச்சரின் விருப்பம் தான். இந்த விதி ஏனெனில், ஒருவர் ஒரு முறை அமைச்சரான பிறகு ஐந்தாண்டுகளும் தான் அமைச்சராக தான் இருப்பேன் என சொல்ல முடியாது. முதலமைச்சர் விரும்பும் வரை தான் இருக்க முடியும் என்பதை உணர்த்தவே இந்த விதி இருக்கிறது. இங்கு ஆளுநரின் விருப்பம் என்பதை முதலமைச்சரின் விருப்பம் என்று தான் அரசியல் சட்டப் பிரிவு 164 தெளிவுபடுத்துகிறது.

தன்னிச்சையாக நீக்க முடியாது

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல் சட்ட பிரிவுகளை துணைக்கு அழைத்து, தன்னிச்சையாக அமைச்சர்களை பதிவு நீக்கம் செய்யும் அதிகாரம் தமக்கு இருப்பதாக கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. முதலமைச்சரின் பரிந்துரை இன்றி ஆளுநர் எப்படி ஒரு அமைச்சரை நியமிக்க முடியாதோ, அதைப்போலவே தன்னிச்சையாக நீக்கவும் முடியாது என்பது தெளிவாகிறது.

ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்

அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளையும் தொடர்ந்து மீறிவரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.  தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

இதனை வலியுறுத்தியே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்ப பெற கையெழுத்து இயக்கத்தை ஜூன் 20-ம் தேதி தொடங்கி மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறது. ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பேராதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கோடிக்கு மேலான கையெழுத்துக்களை பெற்று அவற்றை குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கும் கடமையை மறுமலர்ச்சி திமுக சார்பில் நிறைவேற்றுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.