மீன்களை கழுவுவதற்கா சாலைகள்.? சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!

chennai

லூப் சாலை ஆக்கிரமிப்பு - உயர்நீதிமன்றம் வழக்கு

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை மீனவர்கள் சாலைகளை ஆக்கிரமித்து சாலைகளில் கடைகளை அமைத்துள்ளதால் காலை முதல் இரவு வரை அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மாநகராட்சி தரப்பில், லூப் சாலை மீன் வியாபாரிகளுக்காக ரூ. 9.97 கோடி செலவில் மீன் சந்தை கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அதுவரை அவர்களின் வாழ்வாதாரம் கருதி போக்குவரத்தை முறைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலையின் மேற்கு பகுதியில் உள்ள உணவகங்களின் உரிமங்கள் ஆய்வுசெய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அதன்பின்னர், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சிக்கு அதிகாரம் இருக்கிறதா நீதிபதிகள் கேள்வி எழுப்பியநிலையில், சாலையில் ஆக்கிரமிப்புக்குத்தான் அனுமதிக்கப்படுகிறது, போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்தனர். லூப் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், நடைபாதையையும் ஆக்கிரமிப்பு செய்தநிலையில், மீன்களை கழுவுவதற்கா சாலைகள்,? நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சாலை ஆக்கிரமிப்பை சகிக்கவும் முடியாது, சமரசரசம் செய்து கொள்ளவும் முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

ஏப்ரல் 18-ம் தேதி விசாரணை

இறுதியாக, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி, ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18-ல் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.