ரூ.2000 நோட்டுகள் இனி செல்லாது - மீண்டும் ஒரு பண மதிப்பிழப்புக்கு தயாராகும் இந்தியா ..? 

rs.2000 note

ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற்ர ரிசர்வ் வங்கி

புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் பொதுமக்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ஒரே ஒரவில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் வெகுஜன மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் இரவு பகலாக காத்துக்கிடந்தனர். அதேபோல்,  ஏடிஎம் வாசல்களில் கால் கடுக்க காத்துகிடந்தனர். விரைவில் கருப்பு பணம் மீட்கப்படும் என்றும் 50 நட்களில் அனைத்தும் சீராகிவிடும் என்றும் பிரதமர் மோடி அறிவித்த நிலையில், நிலைமை சீராவதற்கு பல மாதங்கள் பிடித்தது. 

புதிய நோட்டுகளை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி

இதனையடுத்து புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்து வைத்தது. அதை தொடர்ந்து புதிய 100 ரூபாய், 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த பணமதிப்பிழப்பிற்கு எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் செயல் என கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நடவடிக்கையால், சாதாரண பொதுமக்கள் பலரும் பெரும் அவதிக்குள்ளாவதாக செய்திகளும் வெளியாகின. இந்நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரிதாக காணப்பட்ட 2000 ரூபாட் நோட்டுகள்

2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சில ஆண்டுகள் மட்டுமே பொதுமக்களிடம் புழங்கியது. மேலும், 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.  ரூ.2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டது. மேலும், அவற்றின் மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் நான்கு-ஐந்து ஆண்டுகள் ஆகும். இதனால் 2000 ரூபாய் நோட்டுகளில் 10.8 சதவீதம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நோட்டு பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனம் பெறாத அறிவிப்பு

அதன்பிறகு அந்த நோட்டுகளை காண்பதே அரிதானது. இதனால் ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிவிப்பு பொதுமக்களிடம் கவனம் பெறவில்லை என்றே கூறப்படுகிறது.  மீண்டும் பணமதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு தலைவர்கள் தொடங்கி சாமானியர்கள் வரை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

பண மதிப்பிழப்பை விமர்சித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா தோல்வியை மறைக்கும் ஒற்றை தாரக மந்திரம் என குற்றம்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை' என தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 

புதிய பண மதிப்பிழப்புக்கு கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல.. அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பின் போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை. அந்த கஷ்டத்திற்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது. இவ்வாறு அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். 

ஏ.எம்.விக்கிரமராஜா (தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு):

 மதிப்பு அதிகம் உள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டால் அதை பதுக்குவார்கள் என்று கூறித்தான் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்கள். அப்போதே, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டால் என்ன விளைவு ஏற்படும் என வல்லுநர்களை நியமித்து மத்திய அரசு ஆய்வு செய்திருக்க வேண்டும்.முன்பு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, ஏழை மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை வணிகர்களிடம் கொடுத்து தான் மாற்றினார்கள். இதனால் வணிகர்களும் வருமானவரித்துறை விசாரணைக்கு உள்ளானார்கள். ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை மாற்றுவதற்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்க கோருகிறோம். என தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம்

”எதிர்பார்த்தது போலவே, ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற மத்திய அரசு/ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2016 நவம்பரில் நாங்கள் இதைச் சொன்னோம், அது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, மத்திய அரசு/ ரிசர்வ் வங்கி ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியமில்லை. 2000 ரூபாய் நோட்டு ஒருபோதும் ‘சுத்தமான’ நோட்டாக இருந்ததில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் தங்களது கறுப்புப் பணத்தை தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது!”இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார். 


மாற்றம் நிகழுமா..?

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது இனி கருப்பு பணம் ஒழியும் என்றும் பொருளாதரம் முன்னேறும் என்றும், வளர்ச்சிப் பாதையில் இந்தியா செல்லும், என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து வந்தனர். இனி மாற்றம் நிகழ்விருப்பதாகவும்,  புதிய இந்தியா பிறக்க உள்ளதாகவும், பிரதமர் மோடியே தொலைக்காட்சிகளில் தோன்றி விளக்கமளித்தார். ஆனால் தற்போதைய நிலைமையோ தலை கீழாக உள்ளது. எந்த மாற்றமும் இதுவரை நிகழாத நிலையில், தற்போது மீண்டும் பண மதிப்பிழப்பை அமல்படுத்துவது என்பது என்ன மாற்றத்தை நிகழ்த்த போகிறது என் இனி வரும் காலங்களில் தெரிய வரும்.