வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி.. ஜார்க்கண்டில் கைது செய்த திருப்பூர் போலீஸ்.!

website post (62)

தனிப்படை

சமீபகாலமாக சமூக வலைதளத்தில் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் ஐ.சொர்ணவள்ளி  தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

வதந்தி 

இந்த தனிப்படையினர் சமூக வலைதளங்களை கண்காணித்து வந்ததில் முகநூலில் பிரசாந்த் குமார் என்ற கணக்கில் உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை வீடியோவாக தயார் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து வதந்தியை பரப்பி வந்தது தெரியவந்தது. பிரசாந்த் குமார் (24) ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவராகவும் ரயில்வேயில் பார்டராக பணியாற்றி வருகிறார் என்ற தகவலும் கண்டறியப்பட்டது. 

மேலும், இவருடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கில் வேறு மாநிலங்களில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரியவந்தது. பின்னர், இவர் மீது திருப்பூர் மாநகர சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கைது

இந்தவழக்கில் பிரசாந்த் குமார் என்பவரை கைது செய்ய திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன் என்பவரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்  ஜார்க்கண்ட் மாநிலம், லேட்டஹர் மாவட்டம், ஹெகிகாரா என்ற கிராமத்தில் வைஷாலி பகுதியை சேர்ந்த சண்டீஸ்வர்ராய் மகன் பிரசாந்த் குமாரை தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

உரிய விசாரணைக்குப் பின், லேட்டஹர் மாவட்ட உட்கோட்ட நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது உத்தரவின்பேரில் திருப்பூர் அழைத்து வரப்பட்டு, இன்று திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண்.3ல் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.