வான்கடேவில் சச்சின் டெண்டுல்கரின் திருவுருவ சிலை... மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு.!  

sachin

இந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு தனித்துவமான வகையில் வான்கடே மைதானத்தில் சச்சின் முழு திருவுருவ சிலை அமைக்கவிருப்பதாக  மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 10 வருடங்கள் ஆனநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் அவருக்கு முழு திருவுருவ சிலை அமைப்பதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே கூறியதாவது; வான்கடே மைதானத்தில் தான், பேட்டிங் ஜாம்பவான் சச்சின்  தனது இறுதி ஆட்டத்தை 2013 நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார் .இந்த சிலை அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில், வரக்கூடிய ஐபிஎல் போட்டியின் போது இந்த சிலையை திறக்க இருக்கிறோம். சிலை நிறுவும் பணி நடப்பு ஐபிஎல் போட்டிக்குள் நிறைவு பெறவில்லையென்றால், அக்டோபர் மாதம் நடைபெறும் ஒரு நாள் உலகக் கோப்பையின்போது திறக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர்; இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. எனது வாழ்க்கை இங்கேதான்  தொடங்கியது. இது நம்பமுடியாத நினைவுகளுடனான ஒரு பயணம். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தருணம் 2011-ல் நாங்கள் உலகக் கோப்பையை வென்றதுதான் என தெரிவித்துள்ளார்.  

ஏற்கனவே சச்சினின் பெயரில் வான்கடே மைதானத்தில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது அவருக்கு சிலை வைக்க உள்ளது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும்.