சாலையோர உணவகங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு - கண்டு கொள்ளாத மாநகராட்சி 

trichy drainage

கழிவுநீரால் ஏற்படும் சுகாதாரக் கேடு

திருச்சி மத்திய பேருந்து  நிலையம் வ.உ.சி. ரோடு பகுதியில் 15க்கும் மேற்பட்ட சாலையோர உணவு கடைகள் உள்ளன. இங்கு வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துனர்கள் உணவு அருந்தி வரும் நிலையில், இங்கு சைவ மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நீரானது அப்பகுதியிலுள்ள சாலையோர உணவு கடைகளை சூழ்ந்துள்ளது.
மழை நீருடன் கழிவு நீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சாலையோர வியாபாரிகள்;  

அச்சப்படும் மக்கள்

நாங்கள் கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை மாநகராட்சிக்கு சேவை வரி செலுத்தி வந்தோம். இப்போது மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற்று வரி செலுத்த தயாராக இருக்கின்றோம். மழைநீர் கடைகளில் தேங்கி நிற்பதால் மக்கள் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். வடிகால் மண் நிரம்பி அடைந்து கிடக்கிறது. நாங்கள் தான் தண்ணீரை அப்புறப்படுத்தி வியாபாரத்தை செய்கிறோம். இருப்பினும் திடீரென மழை பெய்தால் மீண்டும் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க  மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.