செந்தில் பாலாஜி கைது.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன.?

zzdgxfc

செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு

மோசடி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 15--ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில், அறுவை சிகிச்சைக்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனு மீதான தீர்ப்பு நேற்று சென்னை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு 

அந்தவகையில், 15 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டநிலையில், 8 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி, 8 நாட்கள் காவல் முடிந்து ஜூன் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்ததாக, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை

இந்தநிலையில், செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்தவகையில், அறுவை சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய செந்தில் பாலாஜியை வெளியில் அழைத்து செல்லக்கூடாது. நோய்கள், சிகிச்சை மற்றும் உடல் தகுதி குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனையைப் பெற்று விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜிக்கு எந்தக் கொடுமையையும் ஏற்படுத்தக் கூடாது என்றும், எந்தவித வற்புறுத்தலோ அச்சுறுத்தலோ எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் விசாரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது மூன்றாம் நிலை டிரீட்மெண்ட் முறையைப் பாயன்படுத்தக் கூடாது என்றும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனைகளை வழங்கியுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜிக்கு போதுமான உணவு மற்றும் தங்குமிட வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியை பார்க்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.