செந்தில் பாலாஜி கைது.. அமலாக்கத்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.! 

humsc

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதைத்தொடர்ந்து மனைவி மேகலா தொடர்ந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

செந்தில் பாலாஜி கைது..

கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 15--ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில், அறுவை சிகிச்சைக்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கடந்த ஜூன் 15-ம் தேதி சந்தித்தார். 

மனித உரிமை ஆணையர் நேரில் விசாரணை

அப்போது அவர், "அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன். அமைச்ச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார். சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது என்று தெரிவித்தார்.  

மேலும், தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததால் தலையில் காயம் ஏற்ப்பட்டதாக செந்தில் பாலாஜி என்னிடம் தெரிவித்தார். தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும் துன்புறுத்தியதாக என்னிடம் தெரிவித்தார். இறுதியாக, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் முடிவெடுக்கும்" என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

இதற்கு முன், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது எந்தவித தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என செந்தில் பாலாஜி மனைவி மேகலா மனித உரிமை மீறல் என புகார் அளித்திருந்தார். இதையடுத்துதான், மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்தநிலையில், அமலாக்காத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 6 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை இணை இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.