செந்தில் பாலாஜியை ஆக-12ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்.. சென்னை நீதிமன்றம் அனுமதி.!

custody

கைது.. புழல் சிறையில் அடைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் இருந்து வந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வந்தார். இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 17-ம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.  

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் எனக்கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்து முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.  

அமலாக்கத்துறைக்கு அனுமதி

இந்தநிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டனர்.அதில் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜியை ஆக-12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 

இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது
 
அப்போது, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அமலாக்கத்துறை கவனித்திக்கொள்ளும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருப்பதாக அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இறுதியாக, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி அல்லி தெரிவித்தார்.