செந்தில் பாலாஜி வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு.!

dvvb

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறார் 3-வது நீதிபதி கார்த்திகேயன். 

மருத்துவக்குழு கண்காணிப்பில் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் இருந்து வந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

வழக்கு விசாரணை

செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இருதரப்பு வாதங்கள் கடந்த 27-ம் தேதி நிறைவு பெற்றது. பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்திருந்தனர். 

மாறுபட்ட தீர்ப்பு

இந்தநிலையில், கடந்த ஜூலை 04-ம் தேதி காலை இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு தீர்ப்பில், "செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். அவர் கைது செய்யப்படும்போது சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்" என தீர்ப்பு வழங்கினார். 

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல

இதையடுத்து, "ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, நீதிபதி பரத சக்கரவர்த்தி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை. மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது. தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி அளித்தும்,  மருத்துவ ரீதியாக தகுதி பெற்ற பின் உரிய நீதிமன்ற அனுமதி பெற்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம்" என நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார்.   

3-வது நீதிபதி

செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கில் 3-வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ததையடுத்து, 3-வது நீதிபதியாக நீதிபதி  கார்த்திகேயனை நியமித்தனர். 

விசாரணை 

இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் இன்று ஜூலை 06 சற்று முன்பு விசாரணை தொடங்கியது.   கபில்சிபல் வாதாட வர உள்ளதால் வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஜூலை 11-ம் தேதி க்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். 

நாளைக்கு ஒத்திவைப்பு

இந்தநிலையில், செந்தில் பாலாஜி மனைவி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறார் 3-வது நீதிபதி கார்த்திகேயன்.  இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்தால் சனிக்கிழமை விசாரிக்கிறேன் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். விரைந்து முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.  இந்த வழக்கில் எப்போது விசாரணை என நாளை முடிவு செய்யப்படும் எனக்கூறி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறார்.