செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியவில்லை.. அமலாக்கத்துறை தகவல்.!

ed

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை கருதி அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையின் பிடியில் செந்தில் பாலாஜி

மோசடி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 15--ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில், அறுவை சிகிச்சைக்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனு மீதான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

அந்தவகையில், 15 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டநிலையில், 8 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி, 8 நாட்கள் காவல் முடிந்து ஜூன் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்ததாக, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை வழங்கியிருந்தது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றக்கோரிய வழக்கில், காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்தநிலையில், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நாளை ஜீன் 21-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. 

விசாரணை நடத்த முடியவில்லை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திட்டமிட்டபடி நாளை அதிகாலை இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று இன்று ஜூன் 20-ம் தேதி காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தநிலையில், செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தநிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை கருதி அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து 4 நாட்கள் ஆகியும், இன்னும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தவில்லை. இதுதொடர்பாக அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.