புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி.!

xcbvnbj

சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  

மருத்துவக்குழு கண்காணிப்பில்

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்றக் காவலில் இருந்து வந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வந்தார். 

அதிரடி தீர்ப்பு

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு வழக்கு தொடர்ந்தார். ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்துவந்த நிலையில், கடந்த ஜூலை 14-ம் தேதி மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அதிரடி தீர்ப்பை வழங்கினார். 

மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் வாசித்த தீர்ப்பில், "செந்தில் பாலாஜிக்கு 8 நாட்கள் காவல் வழங்கப்பட்டும், அமலாக்கத்துறை ஒரு நாள் கூட காவலில் எடுக்க முயற்சிக்கவில்லை. சட்டப்படி முதல் 15 நாட்களில்தான் காவலில் எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால், காவலில் எடுக்க வேண்டியது அவசியம். செந்தில் பாலாஜி உடல்நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கருத முடியாது என நீதிபதி தெரிவித்தார். 

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல

செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என தெரிவித்த நீதிபதி, தாம் கைது செய்யப்பட்டதற்கான காரணம் செந்தில் பாலாஜிக்கு தெரியும் என்றும்,  கைது குறித்து செந்தில் பாலாஜிக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது என்று கூறி,  செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனச்சொல்லி, செந்தில் பாலாஜி மனைவியின் கோரிக்கையை சி.வி. நீதிபதி கார்த்திகேயன் நிராகரித்தார்.  

குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவு தான் தனது உத்தரவும் என தெரிவித்த நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜி கைதும், நீதிமன்ற காவலும் சட்டப்பூர்வமானது தான் என தெரிவித்த நீதிபதி, கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும், செந்தில் பாலாஜி சட்டத்தை மதிக்க வேண்டும், விசாரணை நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தார். 

புழல் சிறைக்கு மாற்ற ஏற்பாடு

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வழங்கியநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அமலாக்கத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. புழல் சிறைக்கு மாற்றப்படவுள்ளநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜியை ஆயுதப்படை போலிசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்கின்றனர். புழல் 2 வது சிறையில் செந்தில் பாலாஜியை அடைப்பதற்கான ஏற்பாடுகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.