VAO கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. 4 தனிப்படையுடன் தேடுதல் வேட்டையில் காவல்துறை!

police

நேற்றய தினம் தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரை மர்ம நபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை.  

முதற்கட்ட விசாரணையில்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் நேற்று மதியம் மர்ம நபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அலுவலரைத் தாக்கிய இரண்டு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு அவரை வெட்டியதாக தெரிய வந்தது. 

முதலமைச்சர் உத்தரவு

தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றும் விதமாக இறந்தவரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தது. மேலும், அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டார். 

4 தனிப்படை

மணல் கடத்தல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் உடல் இன்று உடற்கூறாய்வு செய்யப்படுகிறது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே ராமசுப்பு என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கூட்டாளியான மாரிமுத்து என்பவரை தேடி வருவதாக போலிசார் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்த வழக்கில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் பால சரவணன் தெரிவித்துள்ளார். 

முறப்பநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மணல் கொள்ளை தொடர்பாக புகார் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருவதாக அங்குள்ள காவல் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள 2019-ம் ஆண்டே நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. உத்தரவை மீறி செயல்படுபவர்களை தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வில் தன்னுடைய உயிரை இழந்திருக்கிறார் லூர்து பிரான்சிஸ்.