கர்நாடக முதலமைச்சராகிறார் சித்தராமையா.. டி.கே.எஸ்-ஐ சமாளிக்க 30-க்கு 30 பார்முலா.. டெல்லியில் நடந்தது என்ன?

kar cm

துணை முதலமைச்சராக டி.கே.எஸ்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்று வரைக்கும் கர்நாடக முதலமைச்சர் யார் என்ற விவாதம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்தநிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு கர்நாடக முதலமைச்சர் யார் என்ற முடிவை காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. அந்தவகையில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா தான் என்று பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவின் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி

கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் போட்டி போட்டுக்கொண்டிருந்தநிலையில், காங்கிரஸ் தலைமை சித்தராமையாவை, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் என்கிற அடிப்படையிலும், மூத்த தலைவர் என்கிற அடிப்படையிலும், இது அவருக்கான கடைசி பதவி என்கிற அடிப்படையிலும், அவருக்கு முதலமைச்சர்  பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 

கர்நாடக வெற்றிக்கு அச்சானி

இதேநிலையில், டி.கே.சிவக்குமாரும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை கட்டமைத்ததும், நடந்து முடிந்த தேர்தல் வெற்றிக்கு அச்சானியாகவும் செயல்பட்டவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மேலும், சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவர் என்றெல்லாம் கூறி வந்தனர். இவற்றின் அடிப்படையில் டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் முதலமைச்சராக வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி வந்தனர். இந்தநிலையில், நேற்று டெல்லியில் நடந்து முடிந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் கர்நாடகாவின் துணை முதலமைச்சர் என்று அதிகாலை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. 

நாளை மறுநாள் பதவியேற்பு

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு,கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு, வரும் 20-ம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு? என்று தெரிவித்திருந்தார். 

30-க்கு 30 பார்முலா

இந்தநிலையில், கடைசி வரை முதலமைச்சர் பதவிக்கு இருவரும் போட்டி போட்டு வந்தநிலையில், இருவருக்கும் சாதக பாதகம் இல்லாமல், 30-க்கு 30 அதாவது, முதல் 30 மாதம் சித்தராமையா முதலமைச்சராக இருப்பார் என்றும், அடுத்த 30 மாதம் டி.கே.சிவக்குமார் இருப்பார் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் கூடுதலாக 6 இலாக்காக்களை ஒதுக்க உள்ளதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.

இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது. ஏனென்றால், இந்த பார்முலா அறிவிக்கப்பட்டால் மக்களிடத்தில் நம்பிக்கை இழப்பு, மந்தநிலை போன்ற விளைவுகள் வரும் என்பதால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல், உள் ஒப்பந்தமாக அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது.