தொகுதி மறு சீரமைப்பில் சமூக அநீதி களையப்பட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் 

dr ramadoss

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே நிலவி வரும் சமூக அநீதி இந்த மறுவரையறையில் களையப்பட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

தொகுதிகள் மறுவரையறை உறுதி

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளில்  மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது; அதன்படியான பிரதிநிதித்துவம்  தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு  2029-ஆம் ஆண்டு முதல் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது,  நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை  உயர்த்துவதற்கான தடை 2026-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருவது, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில்  888 இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது  2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்பாக மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்பது உறுதியாகிறது.

வடத் தமிழகத்தில் 5 தொகுதிகள்

இதற்கு முந்தைய தொகுதிகள் மறுசீரமைப்பு 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்டது. அதில் தான் பெரும் சமூக அநீதி இழைக்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து கிடந்திருக்க வேண்டிய  பட்டியலின மக்களுக்கான மக்களவைத் தனித் தகுதிகளில் 75% வட மாவட்டங்களில் திணிக்கப்பட்டன. 

தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 7 மக்களவைத்  தனித் தொகுதிகள் இருக்கும்.  அதன்படி 2009  தேர்தலுக்கு முந்தைய தொகுதிகள் மறுவரையறையிலும்  திருவள்ளூர், காஞ்சிபுரம்,  விழுப்புரம், சிதம்பரம், நாகப்பட்டினம்,  நீலகிரி, தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இவற்றில்  தென்காசி தென் தமிழகத்திலும்,  நீலகிரி கொங்கு மண்டலத்திலும் உள்ளன. மீதமுள்ள 5 தொகுதிகளும் வட தமிழகத்தில் தான் அமைந்திருக்கின்றன.

இணைந்துள்ள 5 மக்களவைத் தொகுதிகள் 

தமிழகத்தின் வடக்கு எல்லையான கும்மிடிபூண்டியை உள்ளடக்கிய திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தனித் தொகுதி ஆகும். இந்த தொகுதியின் எல்லை பூவிருந்தவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் முடிவடைவதிலிருந்து சற்று தொலைவில் அடுத்த மக்களவைத் தனித் தொகுதியான காஞ்சிபுரத்தின் எல்லை தொடங்கி விடும். காஞ்சிபுரம் தனித் தொகுதியின் எல்லை  செய்யூர் சட்டப்பேரவைத் தனித்தொகுதியில் முடிவடையும் இடத்திலிருந்து  வானூர் சட்டப்பேரவைத் தொகுதி தொடங்குகிறது. இது  விழுப்புரம் மக்களவைத் தனித்தொகுதிக்குட்பட்டதாகும். தமிழ்நாட்டின் மூன்றாவது மக்களவைத் தனித் தொகுதியான விழுப்புரத்திற்கும்,  நான்காவது  மக்களவைத் தனித் தொகுதியான சிதம்பரத்திற்கும் இடையில்  கடலூர் மக்களவைத் தொகுதியின் சிறு பகுதியும்,  சிதம்பரத்திற்கும், ஐந்தாவது மக்களவைத் தனித் தொகுதியான நாகப்பட்டினத்திற்கும் இடையே மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் சிறு பகுதியும்  வருகின்றன.  இந்த இரு துண்டுகளைத் தவிர மேற்குறிப்பிடப்பட்ட 5 மக்களவைத் தனித் தொகுதிகளும் இணைந்தே காணப்படுகின்றன.

துறைமுகத்தில் 5 தனித் தொகுதி

கடல்வழியாக பார்த்தால் காட்டுப்பள்ளித் துறைமுகத்தில் (திருவள்ளூர்) தொடங்கி நாகப்பட்டினம் ( நாகை)  துறைமுகம் வரை 5 தனித் தொகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. வடதமிழகம் மற்றும் காவிரி டெல்டாவின் 66 சட்டப்பேரவை அல்லது 11 மக்களவைத் தொகுதிகளில்  5 மக்களவைத் தனித் தொகுதிகள் வந்துவிடுகின்றன. அதேநேரத்தில் தமிழகத்தின் ஆறாவது  மக்களவைத் தனித் தொகுதியான நீலகிரி  சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் எல்லையில் அமைந்துள்ளது.  அரக்கோணத்தில் தொடங்கி நீலகிரி வரையிலான  15 மக்களவைத் தொகுதிகள், 90 சட்டப்பேரவைத்  தொகுதிகளுக்கு இது ஒன்று  மட்டும் தான் தனி மக்களவைத் தொகுதி ஆகும்.

பிற சமுதாய மக்களுக்கு வாய்ப்பே இல்லை

இன்னொருபுறம் தஞ்சாவூரில் தொடங்கி  திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை உள்ள 13 மக்களவைத் தொகுதிகள், 78 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  ஒரே மக்களவைத் தனித் தொகுதி தென்காசி மட்டும் தான்.  இவற்றில் தென்காசி, நாகை, சிதம்பரம் ஆகியவை நினைவு தெரிந்த நாளில் இருந்து தனித் தொகுதிகளாகவே நீடிக்கின்றன. தனித்தொகுதிகள் ஒரே பகுதியில் குவிந்திருப்பதால்  மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியல் சமுதாயத்தவர்களால் மக்களவைக்கு செல்வதைப் பற்றி நினைத்தே பார்க்க முடியாது. அதேபோல், தென்மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியல் சமுதாயத்தினருக்கும் இந்த வாய்ப்பு குறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதற்கு முற்றிலும் மாறாக  வட மாவட்டங்களில் பிற சமுதாய மக்கள்  நாடாளுமன்றத்தில் செல்ல போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்த சமூக அநீதிகள் அனைத்தும் தொகுதி மறு சீரமைப்பில் களையப்பட வேண்டும் என்பது தான் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு. அது நிறைவேறும் என்று நம்புவோம். என மருத்துவர் ரமாதாஸ்அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.