திரையில் சமூகநீதி.. நிஜத்தில்.? இஸ்லாமியர்களை நிற்க வைத்து பேசினாரா வேளாண்துறை அமைச்சர்.?

sddd

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இஸ்லாமியர்களை நிற்க வைத்து பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

அரசியல் தலைவர்கள் கண்டனம் 

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகள் சந்திக்க சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு நிறைய நாற்காலிகள் இருந்தும் உட்கார வைக்காமல் நிற்க வைத்து பேசுகிற மாதிரியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, அதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

திரையில் சமூகநீதி.. நிஜத்தில்.? 

அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படத்தின் கதைக்கருவே யார் நிற்பது யார் உட்காருவது என்று சமூகநீதி பேசக்கூடிய அரசியலை மாரி செல்வராஜ் இயக்கியிருப்பார். இந்தநிலையில், தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்த செயல்களை மாமன்னுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

சீமான் கண்டனம்

அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இதுதான் சமூகநீதியா?, இதுதான் சமத்துவமா?, இதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 

இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா?

"சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சருமான ஐயா எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார். இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா?

சமமாக உட்கார வைக்ககூட மனமில்லையா?

இசுலாமியப் பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றபோகிறது? இசுலாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இசுலாயாமியர்களுக்கு உரிய பிரதிநிதிதுவத்தையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இசுலாமிய பிரதிநிதிகளை சமமாக உட்கார வைக்ககூட மனமில்லையா?

இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா?

“கடைப்பிடிக்கமுடியாத சூழ்நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு”. மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா? இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.