கோலகலமாக நடந்த ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்

srirangam ther

108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.


திருக்கோவிலை வலம் வந்த நம்பெருமாள்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தை மாதம் புனர்பூச திருத்தேர், பங்குனி கோரதம் என வேறு தேரோட்ட வைபவங்கள் நடைபெற்றாலும் பட்டித்தொட்டிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக சித்திரை தேரோட்ட விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல் 10ம்தேதி நடைபெற்றது.

நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நம்பெருமாள் திருக்கோவிலை வளம் வந்தார்.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 


தேரை வடம் பிடித்து இழுந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு ரெங்கா ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில் சுமார் 700க்கும் அதிகமான காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.