10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்..

website post - 2023-04-06T111916

தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், 11-ம் வகுப்புக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்புக்கு இன்று பொதுத் தேர்வுகள் தொடங்கி உள்ளன. இன்று நடைபெறும் மொழிப்பாட தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 9.76 லட்சம் மாணாக்கர்கள் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடக்கிறது. வினாத் தாள்களை படிக்க 15 நிமிடங்கள் மாணவ, மாணவிகளுக்கு நேரம் வழங்கப்படுகிறது.

சிறப்பு ஏற்பாடுகள்

12,639 பள்ளிகளிலும்,4216 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கண்காணிப்பு தீவிரம்

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையம், 2 விடைத்தாள் மையங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

12-ம் வகுப்பு தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் ஆப்சென்ட் இல்லாமல் முழு அளவில் மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.