சூடானில் ஏற்பட்ட ராணுவ மோதல் - பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு

sudan violence

அதிகாரத்தை கைப்பற்ற ஏற்பட்ட  மோதல்

ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டில் ராணுவ தளபதி மற்றும் துணைராணுவ தளபதி ஆகியோருக்கிடையே அதிகாரத்தை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டு அந்நாட்டில் கலவரமாக வெடித்துள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்ட நிலையில், துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

இந்த நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.


பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு- 2,600 பேர் காயம் 

இதனிடையே சூடானில் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். இந்த தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது. 2,600 பேர் காயம் அடைந்து உள்ளனர். உயிரிழந்தவர்களில் இந்தியர் ஒருவர் உட்பட ஐ.நா. பணியாளர்களும் உயிரிழந்து உள்ளனர். கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்த மோதலில் துணை ராணுவ தளங்கள் மீது சூடான் ராணுவம் வான்வழி தாக்குதல்களிலும் ஈடுபட தொடங்கியது. இந்த சூழலில், சூடான் மோதலில் ஐரோப்பிய யூனியன் தூதர் ஒருவரை அவரது இல்லத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. சூடானின் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்து உள்ளதுடன் இந்த மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி வேண்டுகோளும் விடுத்து உள்ளது. எனினும், போர்நிறுத்த விதிமீறலில் ஈடுபட்டு விட்டனர் என இரு படைகளும் மற்றவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. ராணுவத்தின் இரு தலைவர்களும், தலைநகர் கார்டோம் மற்றும் பிற பகுதிகளை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் அதனை பாதுகாக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் கூறி வருகின்றனர்.