தொடரும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்..

பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டு ஆதாரங்களை சமர்பிக்க உச்சநீதிமன்றம் அனுமதி.!

wrestlers ttt

 11-வது நாளாக தொடரும் போராட்டம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் 11-வது நாளாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

உச்சநீதிமன்றம் உத்தரவு

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

போராட்ட களத்தில் பிரியங்கா காந்தி

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதற்கு முன் பிரியங்கா காந்தி போராட்டத்தில் கலந்து கொண்டு மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். இதனையடுத்து, நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். 

போராட்டத்திற்கு உடன் நிற்போம்

இந்தநிலையில், நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக உடன் நிற்போம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “ இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!” என தெரிவித்திருந்தார். 

பி.டி.உஷாவை  சாடிய சீமான்

"நாட்டிற்காக விளையாடி புகழை ஈட்டித் தந்த மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து உலக அரங்கில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சரண்சிங் மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க துணிவின்றி, போராடும் மல்யுத்த வீராங்கனைகளால் நாட்டிற்குத் தலைகுனிவு ஏற்படுவதாக, இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவர் அம்மையார் பி.டி.உஷா கூறுவது வெட்கக்கேடானது. இதன் மூலம் பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கவே பாஜக விரும்புகிறது என்பது உறுதிப்பட்டுள்ளது" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பி.டி.உஷாவை கடுமையாக சாடியிருந்தார். 

எதிர் கொள்ள தயார்

வீராங்கனைகள் போராட்டம் இன்றோடு 11-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்தனர். இந்தநிலையில், பிரிஜ் பூஷன் சிங், மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்றும் விசாரணையை எதிர் கொள்ள தயார் என கூறியிருந்தார். 

குற்றச்சாட்டு ஆதாரங்களை சமர்பிக்க அனுமதி

இந்தநிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சீல் செய்யப்பட்ட கவரில் கூடுதல் ஆதாரங்களை சமர்பிக்க மல்யுத்த வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.