'தி கேரளா ஸ்டோரி' தடை மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. உளவுத்துறை எச்சரிக்கை.! 

kerala

'தி கேரளா ஸ்டோரி' ட்ரெய்லர்

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்தி திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த  இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த  32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு  கட்டாய மத மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று  காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.  

படத்திற்கு தடை.. மனுவை ஏற்க மறுப்பு 

படத்தின் ட்ரெய்லர் வெளியானதையடுத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படமானது வரும் மே 5-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பிரசாரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்று படத்தின் கதை களம் இருப்பதாகவும், அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து, கேரளா உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  

தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

'தி கேரளா ஸ்டோரி' படம் தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.