ஜல்லிக்கட்டு சட்டம் தெளிவாக இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி 

jallikattu

தமிழ்நாடு அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் தெளிவாக இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தடை கோரி வழக்கு 

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஜல்லிக்கட்டும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை மாவட்டம் என பல மாவட்டங்களில் பிகவும் விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியினால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

இதனால் 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம்  29(1) என்ற பிரிவு இந்திய மக்களுக்கு தனித்துவமான கலாச்சாரம், மொழி, எழுத்து, ஆகியவற்றை பாதுகாத்து போற்றி வளர்ப்பதற்கான உரிமையை வழங்குகிறது. இதனால் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, பிரிவு அடிப்படையிலும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்ற அடிப்படையிலும், சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த தமிழக மக்களும் ஜல்லிக்கட்டை கொண்டாடியுள்ளனர் என்றும் அதற்கான சான்றுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் வாதாடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சட்டம் இயற்றி அனுமதியளித்தது. 

மீண்டும் தடைகோரி வழக்கு 

இந்த சட்டத்தை எதிர்த்து 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீட்டா உள்ளிட்ட அமைப்புகளால் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் கடந்த 5 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் பெரிய நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், மீண்டும் இந்த வழக்கு தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

தமிழ்நாடு அரசின் வாதம்

இந்த மனுக்களுக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, ஜல்லிக்கட்டு போட்டியால் விலங்குகளுக்கு எந்த வித ஆபத்தோ, துன்பமோ ஏற்படுத்தப்படவில்லை என்றும், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவே ஜல்லிக்கட்டு கொண்டாடப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் நாட்டு வகை மாடுகள் பாதுக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் கருத்து

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் தெளிவாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு சட்டத்தில் பல்வேறு அம்சங்கள் கேள்வி எழுப்புவதாக உள்ளது எனவும் கேள்வி எழுப்பும் அம்சங்களை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வரும் செவ்வாய் கிழமைக்குள் (டிசம்பர்-06) ஜல்லிக்கட்டு நடத்தப்படும் விதம் குறித்தும், வாடி வாசல் முதல் வீரர்கள் காளைகளை அடக்கும் இடம் வரையிலான வரைபடத்தை தாக்கல் செய்யவும், வீரர்கள் காளையை அடக்கும் விதம் குறித்தும் விரிவான அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.