மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் - நிர்மலா சீதாராமன் 

nirmala setharaman

இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது இன்று 3-வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், 2013 ஆம் ஆண்டில் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது. ஆனால் 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். 

இந்தியை தடுக்க அதிகாரம் இல்லை

தொடர்ந்து அவர் பேசியதாவது; மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதாக கூறுபவர்கள் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள்தான் என்றும் சுதந்திரம் வழங்கிய போது தனக்கு வழங்கப்பட்ட செங்கோலை கைத்தடியாக நேரு பயன்படுத்தினார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளதாகவும், நீங்கள் தமிழை வளர்க்கும் அதிகாரம் இருக்கும் போது சமஸ்கிருதம், இந்தியை படிக்க கூடாது என தடுக்க அதிகாரம் இல்லை என்றும் சாடியுள்ளார். 

எய்ம்ஸ் தாமதம் - தமிழக அரசே காரணம்

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதமானதாகவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக் கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை எனவும் கூறினார். இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பிரதமர் மோடி இன்று விவாதத்திற்கு பதிலளிப்பார் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், இன்று மாலையில் பிரதமரின் பதிலுரை தொடங்கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.