வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை சந்திக்க வேண்டும்.. காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு.!

dgp

வாரத்தில் ஒருநாள் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்திருக்கிறது. 

பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். பெயரளவில் மட்டுமே காவல் நிலையங்களில் ஒரு நாள் பொதுமக்களை காவல்துறை உயர் அதிகாரிகள் சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. 

இந்தநிலையில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்களை வாரத்தில் ஒரு நாள் சென்று சந்திக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. அரசாணையில், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்றும், வாரத்தில் புதன்கிழமை பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. 

மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் அலுவலகங்களில் பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று, அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், பொதுமக்கள் எளிதாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கவும் வழக்கின் விவரங்களை கூறவும் முடியும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவானது பிறப்பித்திருக்கிறது.