ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.. அமைச்சர் நேரில் சென்று முடித்து வைத்தார்.!

website post (18)

5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 
 
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக பணி நியமனம் செய்யவில்லை. இதனால், தங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையில், முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கூட, வேலை வாய்ப்பு பெறுவதற்கு மற்றொரு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை வெளியிட்டனர். அந்த அரசாணையை நீக்கி, ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முதலில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் கிட்டத்தட்ட 700-க்கும் அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்தநிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு வரத்தில் நல்ல முடிவை எடுப்பார், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் போராட்டக்காரர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.