டெண்டர் முறைகேடு.. எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி.!

zdg

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மழைநீர் வடிகால், சாலைகள் சீரமைக்க விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், முறைகேடு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   

2018-2019 காலகட்டத்தில் சென்னையில் சாலைகள் சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக 590 கோடி ரூபாய் மதிப்பில் 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தது.  இந்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் டெண்டர் எடுத்தவர்கள் என புகாரில் இடம்பெற்றிருந்தார்கள். 

இதையடுத்து, அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமன் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் அந்த முதற்கட்ட விசாரணையில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. 

இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் அனுமதி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார். 

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, ஆரம்பகட்ட விசாரணையிலன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசு தான். சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு மாநில அரசிற்கு எவ்வித தடையும் இருக்கக்கூடாது. அதனடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதில் எடுக்கிற முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடரலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.