ஈரோடு இடைத்தேர்தல் நடத்திய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை.!

raid

ஈரோடு மாநகராட்சி ஆணையரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியுமான சிவக்குமார் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் புகார்

சிவக்குமார் தற்போது ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், பல்லாவரம் நகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த போது, அவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் இருந்தது. இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன. 

தேர்தல் நடத்து அதிகாரி

பின்னர் பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். சிவக்குமார் அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மாநகராட்சி ஆணையர் என்ற அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிகாரியாகவும் செயல்பட்டார். 

ரெய்டு

இந்நிலையில், பல்லாவரம் நகராட்சியில் பணியாற்றிய காலத்தில் குவிந்த புகார்களைத் தொடர்ந்து சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில்தான் இன்று ஈரோட்டில் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது.