காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த முதலமைச்சரின் தாய் மற்றும் சகோதரியால் உச்சகட்ட பரபரப்பு 

y.s.sharmia reddy

முதல்வருக்கு எதிராக தனிக்கட்சி தொடங்கிய சகோதரி

ஆந்திரமாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அவரின் சகோதரியான ஷர்மிளா ரெட்டி  ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா என்ற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். இதனால் அவ்வப்போது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்துக் கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளை ஷர்மிளா ரெட்டி கன்னத்தில் அறைந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அவரது தாயாரும், காவல்துறையினரை தாக்கி ஆவேசமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது.

 

வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு 

அம்மாநில பொதுப்பணித்துறைக்கான தேர்வின்போது, வினாத்தாள் கசிந்து பெரும் பிரச்சனையை கிளப்பியது. இதனால் கடந்த மார்ச் 15 ஆம் தேதி நடக்க இருந்த துணைப்பொறியாளருக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடக்க இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பொதுப்பணித்துறை அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ.டி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படபோவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த ஷர்மிளா ரெட்டியை இன்று காவல்துறை அதிகாரிகள் வழியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த ஷர்மிளா காவல்துறை அதிகாரியை தாக்கி கன்னத்தில் அறைந்துள்ளார்.  இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில், பெண் காவலர்களிடமும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதும், அவர்களை பிடித்து இழுப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. 

தற்காப்பிற்காகவே தாக்கினேன் - ஷர்மிளா

இந்த சம்பவத்திற்கு விளக்கமளித்த ஷர்மிளா ரெட்டி, காவல்துறையினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும்,  எனது தற்காப்பிற்காகவே தாக்கியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தரப்பட்ட விளக்கத்தில், எந்த விதிமுறைகளையும் பின்பற்றமாலும், முன் அனுமதியின்றி போராட்டம் செய்வதாலும் தான் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

முதல்வரின் தாயாரும் கன்னத்தில் அறைந்தார்

இந்நிலையில், தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட தனது மகளை பார்ப்பதற்காக சென்ற அவரது தாயாரான ஒய்.எஸ்.விஜயம்மாவையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கோவமடைந்த விஜயம்மா பெண் காவல்துறையினரையும் கன்னத்தில் அறைந்து தாக்கினார். 

முதலமைச்சரின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் காவல்துறை அதிகாரிகளின் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஆந்திரமாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.