போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும்தான்.. ரிசல்ட் 2024-ல் தெரியும்.. அண்ணாமலை அதிரடி.!

jac

அதிமுக பாஜக சண்டை 

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பற்றியான விவாதம் தான் இன்றளவும் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கிடையில், பாஜக அமைச்சர்களை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்று சந்தித்தது, இனி அதிமுகவோடு கூட்டணி வைத்தால் என் தலைவர் பதவியை விட்டு ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தது என தமிழக அரசியல் களமும் சூடு பிடித்தது. 

மீண்டும் கூட்டணியா?

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முன்னாள் அதிமுக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் அறிவித்தபோதும் தலைமை ஏன் அறிவிக்கவில்லை என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் எழுப்பி வந்தனர். இதையடுத்து, இரண்டு தினங்களுக்கு முன்பு கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் முடிவு என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதன்மூலம், மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி வைத்துவிடுவார்கள் என்ற யூகத்திற்கு முடிவு கட்டிய மாதிரியான பதிலாக இருந்தது.

என்னுடைய விருப்பத்தை சொல்லிவிட்டேன்

இந்தநிலையில், பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று அக்-05 நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்களது விருப்பம், கூட்டணி பிரச்னையில் எனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் கூறிவிட்டேன்" என்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார். 

2026-ல் அரசியல் மாற்றம்

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்று பிரிந்து சென்றவர்கள் நாளை சேரலாம். அவரவர்களுக்கு அவர்களது கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல், பாஜகவை வளர்ப்பதே என்னுடைய நோக்கம், பிரிந்து செல்பவர்கள் பற்றி கவலையில்லை என்றும், டெல்லியிலுள்ள பாஜக மேலிட தலைவர்கள் தான் இனி கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார். 

மேலும், எந்த பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தமிழகத்தில் திமுக - பாஜக இடையே தான் போட்டி என 2 ஆண்டுகளாகவே கூறிவருகிறேன். 2026-ல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும், அதற்கான அறிகுறி 2024-ல் தெரியும்" என செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.