உயர் கல்வித்துறையின் அரசாணை.. பாமக'வின் சாதி அரசியல்.. திருமாவளவன் கண்டனம்.!

pmkvs vck

கல்லூரியில் சேரும் மாணவர்களிடையே சாதி அடிப்படையில் இடைவெளியை உருவாக்குவதா? உயர் கல்வித் துறை மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிப்பதா? உயர் கல்வித்துறை அரசாணை-161 குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், பாமக'வின் சாதி அரசியலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் என தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

உள்நோக்கம் கற்பிக்கிறது

“கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அது முடிவுறும் தறுவாயில் உள்ளது. இச்சூழலில் பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கை உயர் கல்வித்துறை மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. அத்துடன், மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான இடைவெளியை உருவாக்குவதாகவும் உள்ளது. 

பாமக நிறுவனர் கூறியதில் உண்மையில்லை

அவரது அறிக்கை உண்மையைத் திரித்துக் கூறுவதாக உள்ளது. அதாவது, உயர்கல்வித் துறையின் அரசாணை எண் -161 இல் “ பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும்; அதன்பின்னரும் காலியிடங்கள் இருந்தால் அவை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும்; போதிய எண்ணிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லாத சூழலில் மட்டும்தான் அந்த இடங்கள் பட்டியலினம், பழங்குடியினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என பாமக நிறுவனர் அந்த அறிக்கையில்  கூறியுள்ளார். அந்த அரசாணையில் அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்பதே உண்மையாகும். 

திரித்துக் கூறுகிறார் பாமக நிறுவனர்

அந்த அரசாணையின் பத்தி எண்- 33 இல், “நிரப்பப்படாத BC-க்கான காலியிடங்களை மற்ற சமூகத்தினரைக் கொண்டு நிரப்பலாம் ( unfilled BC vacancies can be filled by other communities)" - என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதனைத் தம் விருப்பம்போல அவர் 
திரித்துக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. 

திட்டமிட்டு பரப்புவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது 

அத்துடன், அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழலில், இவ்வாறு தவறானதொரு கருத்தை உள்நோக்கத்துடன் திட்டமிட்டுப் பரப்புவது கல்லூரி முதல்வர்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பது ஏன்? 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் ( எம்.பி.சி) மாணவர்கள் உயர்கல்வியில் உரிய வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இல்லாத ஒன்றைச் சொல்லி அரசாணைக்கு எதிராக கல்லூரி முதல்வர்களும் உயர்கல்வித் துறையும் செயல்படுவதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குவது ஏன்? அதாவது, அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களும் உயர்கல்வித் துறையும் தமிழ்நாடு அரசும் பட்டியல் சமூகத்திற்கு ஆதரவாகவும் பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராகவும் செயல்படுவதைப் போல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பது ஏன்? 

பாமகவின் சாதியவாத சூது அரசியலை விசிக கண்டிக்கிறது

2019 - '20 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கல்லூரிப் படிப்பில் சேரும் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மாணவர்களின் எண்ணிக்கைக்கும் (GER)  பொது மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசுக் கல்லூரியில் சேரும் அம்மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை  உள்நோக்கம் கொண்ட சாதி அரசியலாகவுள்ளது. பாமகவின் இந்த சாதியவாத சூது அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  கண்டிக்கிறது. 

விளக்கம் அளிக்க வேண்டும்

இந்நிலையில், கல்லூரி முதல்வர்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், தற்போது நடைமுறையிலுள்ள அரசாணை எண்-161 குறித்துத் தெளிவை உருவாக்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொள்கிறோம்.