தமிழக வேளாண் பட்ஜெட் 2023-2024

விவசாய மக்களின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது.. எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்.!

cxccvg

இந்த விடியா திமுக அரசு தமிழக விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி இன்று நடந்த வேளாண் பட்ஜெட் பற்றி விமர்சனம் செய்துள்ளார்.  

கிடைக்க வேண்டியது எதுவும் இல்லை

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று நடைபெற்ற வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாகத் தான் பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை. வேளாண் மாநிலக் கோரிக்கையில் என்ன இடம் பெற்றிருக்கிறதோ, அதேதான் வேளாண் பட்ஜெட்டிலும் இடம் பெற்றிருக்கிறது. வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 2 மணி நேர பட்ஜெட் வாசிப்பில் முக்கியமாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டியது எதுவும் இல்லை. 

எந்த அறிவிப்பும் செய்யவில்லை

திமுக 2021 சட்டமன்ற தேர்தலின் போது கரும்புக்கு ஆதார விலையாக 4000 ரூபாய் என்று அறிவித்தார்கள். ஆனால், இப்பொழுது கரும்பு மெட்ரிக் டன்னுக்கு வெறும் 195 ரூபாய்தான் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. அதேபோல், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் பரப்புரையில் அறிவித்தார்கள் ஆனால், அது பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை. 

நடக்க முடியாத சவலைக் குழந்தையாகப் படுத்திருக்கிறது

திமுக தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தார்கள் ஆனால், அதுவும் கிடைக்கவில்லை. விவசாயிகள் கட்டிய காப்பீட்டுத் தொகையைக் கூட பெற முடியவில்லை. இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் நடக்க முடியாத சவலைக் குழந்தையாகப் படுத்திருக்கிறது. எழுந்து கொள்ள முடியாத நிலையில் தான் இந்த வேளாண் பட்ஜெட்டை பார்க்க முடிகிறது.

கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது

அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணி, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், காவிரி-குண்டாறு போன்ற திட்டங்களை அறிவித்தோம். இது அதிமுகவின் திட்டங்கள் என்பதால் இதற்கு திமுக அரசு நிதி ஒதுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த அரசால் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் வேளாண் பெருங்குடி மக்களுக்காக எந்த புதிய திட்டமும் இல்லாதது வேதனையளிக்கிறது. இந்த அரசு தமிழக விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது. இந்த வேளாண் பட்ஜெட் வெறும் அறிக்கைதான் என்று விமர்சித்து பேசியுள்ளார்.