மேகதாது அணைக்கு நிலம் கையக்கப்படுத்துவதே அரசின் முதல் பணி.. சித்தராமையா அறிவிப்பு.! 

dfg

மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகா நிதிநிலை அறிக்கையின் மீதான உரையில் பேசியிருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது கர்நாடகா அரசு. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கில் அணை கட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது.  

இந்தநிலையில், கர்நாடகாவில் புதியதாக காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று முதல் நிதிநிலை அறிக்கை இன்று ஜூலை 07-ம் தேதி முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நடப்பாண்டுக்காக, 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

நிதிநிலை அறிக்கையின் மீதான உரையில், கர்நாடகாவில் அணை கட்டுவது, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா நிதிநிலை அறிக்கையின் மீதான உரையில் பேசியதாவது,  மேகதாது அணைக்கு நிலம் கையக்கப்படுத்துவதே அரசின் முதல் பணியாகும் என்றும், மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். 

மேலும்,  முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளோம். மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.