மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது - உச்சநீதிமன்றம் அதிரடி.!

go vs go

மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன்னர் அதனை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஆய்வு செய்யும் வரை மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். 

மூன்று மாநில அரசுகள் ஆளுநருக்கு எதிராக மனுதாக்கல்

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைமையிலான அரசு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  வழக்கு தொடர்ந்தது. அம்மாநிலத்தின் முக்கியமான 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை குறிப்பிட்டு பஞ்சாப் அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக வழக்கு போட்டது. பஞ்சாப் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளும் அந்தந்த மாநில ஆளுநர்கள் அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுகிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

ஆளுநருக்கு அடி 

இந்தநிலையில், பஞ்சாப் மாநில ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா ?. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பிறகு ஆளுநர்கள் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். 

மாநில அரசுகளுக்கு இடி

மேலும், மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன்னர் அதனை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று, ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆய்வு செய்யும் வரை மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். 

இதற்கிடையில், தமிழ்நாடு, கேரளாவிலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர்கள் நிறுத்தி வைத்துள்ளதாக பஞ்சாப் அரசு வாதத்தை முன்வைத்தது. அப்போது, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என நீங்கள் எவ்வாறு கூற இயலும்?. இந்த விவகாரத்தில் மாநில அரசு ஏன் நீதிமன்றம் வர வேண்டும்? ஏற்கனவே வேறு ஒரு மாநிலத்திலும் இது போன்று கோரிக்கை எழுந்தது என நீதிபதி தெரிவித்தார்.  

நவம்பர் 10-ம் தேதி தெரியும்

ஏற்கனவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டிருக்கிறார். அதேபோல், கேரள மாநில ஆளுநர் 3 மசோதாக்களை கிடப்பில் போட்டிருக்கிறார். இதனடிப்படையில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் மூன்று மாநில அரசுகளின்  மனுக்களை நவம்பர் 10-ம் தேதி விசாரணை செய்ய இருக்கிறது உச்ச நீதிமன்றம். மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி இருக்கிறதா?, அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை ஆய்வு செய்வதற்க்கான கால நேரம் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.