அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

mkstalin about jallikattu

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திருநாளில் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்க கோரி இந்திய விலங்குகள் நல வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கிடையே விலங்குகள் நல வாரியம்,  பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தின் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் தேதியை தள்ளி வைத்தது.  


ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி

இதனையடுத்து இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தீர்ப்பினை வாசித்த நீதிபதிகள், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்றும், ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தன்ர்.  இதனால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது

உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது; தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழா

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுபோல பல்வேறு தலைவர்களும் ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.