கால்பந்து உலகின் அசைக்க முடியாத அரசன் பீலே 

pele

கால்பந்து விளையாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்ற பிரேசில் வீரர் பீலேவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தனது தனித்துவமான ஆட்டத்தால் கால்பந்து ரசிகர்களை கட்டிப்போட்ட பீலே பிரேசிலின் முக்கிய அடையாளமாகவே மாறிப்போனார். 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிரேசிலின் ஒரு கிராமத்தில் பிறந்த பீலே தனது 15 வது வயதில் காலபந்து ஆர்வத்தின் மிகுதியால் சாண்டோஸ் கிளப்பில் இணைந்து தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொண்டார். அந்த கிளப்புக்காக 1962 மற்றும் 1963 ஆகிய ஆண்டுகளில் கோப்பையையும் வென்று கொடுத்தார். இவரது ஆட்டத்திறனை கண்ட பிரேசில் காலபந்து கூட்டமைப்பு தேசிய அணியில் விளையாட வாய்ப்பை வழங்கியது. பீலே சர்வதேச போட்டிகளில் விளையாட அடியெடுத்து வைத்த போது அவரது வயது 17. அப்போது மிக இளம் வயதில் சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர் என்ற சிறப்பையும் பீலே பெற்றார். அவர் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டே பிரேசில் அணி உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. இதனால் இந்த போட்டியில்தான் பீலே யார் என்பதை உலகம் உணரத் தொடங்கியது.  

உலகமே பீலேவை திரும்பி பார்க்க வைத்த உலக கோப்பை போட்டித் தொடர்

தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்திறனால் எதிரணியை கலங்கடிக்க செய்த பீலேவுக்கு அடுத்த 1962 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டி பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் பீலே. முடிவில் தொடந்து இரண்டாவது முறையாக பிரேசில் அணிக்காக கோப்பையும் பெற்றுக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு நடந்த அடுத்த உலககோப்பையில் பீலே பங்கெடுத்தார். உலகமே பீலேவின் ஆட்டத்தைக் காண மைதானத்தில் குவிந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தொடரின் போது பீலே முதல் சுற்று ஆட்டத்திலேயே காயமடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.  அந்த சுற்றுடனே பிரேசில் அணி தொடரைவிட்டு வெளியேறியது. 

பீலேவை விமர்சித்து வியாபாரம் பார்த்த ஊடகங்கள்

இது பிரேசிலுக்கு மட்டுமல்ல உலக முழுவதிலுமிருந்த பீலேவின் ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றமாக அமைந்தது. இதனால் பீலே கால்பந்து உலககிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக செய்திகள் வலம் வந்தன. அதோடுமட்டுமல்லாமல் பீலேவை ஓய்வு பெற சொல்லியும் பலர் வற்புறுத்தியுள்ளனர். பீலேவின் கால்பந்து கனவு இனி அவ்வளவு தான் என ஊடகங்கள் விமர்சனங்கள் எழுதி தள்ளின. இதனை சிறிதும் பொருட்படுத்தாத பீலே 1970 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் பங்கெடுத்தார். இந்த முறை அவர் விளையாடியது எதிரணிக்காக மட்டுமல்ல தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடியாய் அவரது ஆட்டம் அமைந்தது. தொடர்ந்து விமர்சனங்களுக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி தந்த பீலே சொல்லி அடித்தது போல அந்த உலக கோப்பையையும் பெற்றுக் கொடுத்தார். 

3 முறை உலக கோப்பையை வென்ற ஒரே வீரர்

அந்த தொடரில் மட்டும் 12 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார். தொடர்ந்து தனது எதிர்ப்பையெல்லாம் கோலாக மாற்றிய பீலேவுக்கு சிறந்த ஆட்டக்காரர் விருந்துக்கான தங்க ஷூவும் கிடைத்தது. தனது நாட்டுக்காக 3 மூன்று உலகக் கோப்பையை (1958, 1962, 1970) வென்றுக் கொடுத்த ஒரே வீரர் என்ற பெயரையும் பீலே வசப்படுத்தியுள்ளார். 1974 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பீலே இதுவரை 659 சர்வதேச போட்டிகளில் விளையாடி 643 கோல்கள் அடித்துள்ளார். 

பிரபலங்களையே தனது ரசிகர்களாக மாற்றிய பீலே

தனது ஓய்வுக்குப்பின் கிளப் அணியான நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடிய பிலே அந்த காலகட்டத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக இருந்தார். தொடர்ந்து அந்த அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்த பீலே தனது இறுதி போட்டியான காஸ்மோஸ் மற்றும் சாண்டோஸ் அணிகள் மோதிய போட்டியில் பங்கெடுத்தார். இந்த ஆட்டத்தை காண உலகம் முழுவதிலுமிருந்த ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது விளையாட்டு உலகில் கொடிகட்டிப் பறந்த மிக் ஜாக்கர், எல்டன் ஜான், ராபர்ட் ரெட்ஃபோர்ட், முகமது அலி, உள்ளிட்ட ஜாம்பவான்கள் பீலேவின் ஆட்டத்தை நேரில் காண வந்திருந்தனர். இதனால் இந்த போட்டி உலகம் முழுவதின் கவனத்தை பெற்றது. இப்போட்டியின் முதல் பாதியில் காஸ்மோஸ் அணிகாக ஆடிய பீலே, இரண்டாம் பாதியில் தன்னை வளர்த்துவிட்ட கிளப்பான சாண்டோஸ் அணிகாக ஆடினார்.

பீலேவுக்கு கிடைத்த கவுரவம்

இதுவரை அனைத்து சர்வதேச போட்டிகளையும் சேர்த்து பீலே சுமார் 1000 கோல்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார். 

பீலேவின் இந்த ஆட்டத்திறனால் பீரேசில் நாட்டின் வறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கத் தொடங்கியது. 

உலக பாரம்பரியத்தை காக்கும் அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு பீலேவை தங்கள் அமைப்பின் அம்பாசிடராக நியமனம் செய்தது. அத்துடன் பிரேசின் நாட்டில் கவுரவ அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதை கடந்த 2000 ஆம் ஆண்டு பீலேவுக்கு வழங்கி ஃபிஃபா கவுரவம் சேர்த்தது. 

அதேபோல், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ”கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்” விருதையும் வழங்கி பீலேவை புகழின் உச்சியில் அமர்த்தியது. 

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த பீலே

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீலேவுக்கு பெருங்குடலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக தொடர் சிகிச்சையில் இருந்த பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்ததை அடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், புற்றுநோய் மிகவும் தீவிரமாக உடலின் சில பாகங்களுக்கு பரவியது. மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விளையாட்டை நேசிப்போரின் இதயத்தில் கலந்த பீலே...!!

இந்நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது தனித்துவமான ஆட்டத்திறனால் உலகத்தையே கட்டிப்போட்ட கால்பந்து உலகின் அசைக்க முடியா அரசனான பீலே, விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் நிச்சயம் நிறைந்திருப்பார் என்பதே உண்மை..!!