அதிமுக தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்த உயர்நீதி மன்றம்

admk general meeting

சர்சையை ஏற்படுத்திய அதிமுக பொதுக்குழு 

அதிமுகவில், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும்,  இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்த கால கட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் - ஒபிஎஸ் கலந்து கொண்ட போது இரு தரப்பினரின் மோதல் உச்சகட்டத்திற்கு சென்றது. அதிமுக தொடங்கிய கால கட்டத்தில் இருந்த நடந்த அனைத்து பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானங்கள் முன் மொழிந்து அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவது வழக்கமானதாக இருந்து வருகிறது. ஆனால் அன்றைய கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. 

பாதியில் வெளியேறிய ஓபிஎஸ் தரப்பு

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி. பிரபாகர் உள்ளிடோர் பாதியிலேயே வெளியேறினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இரு தரப்பினரும் மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். 

நாளை தொடங்கும் விசாரணை

இந்நிலையில், அதிமுக பொதுகுழுவை எதிர்த்து ஓ.பிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை கோடை விடுமுறை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் ஓபிஎஸ் தரப்பு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வரும் நிலையில், விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.