மாணவிகளை இதுக்கா பயன்படுத்துவிங்க.. - பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்.!

website post (40)

விடைத்தாள் முகப்புப்பக்கம் தைக்கும் பணி தீவிரம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாளுடன் புகைப்படம், பதிவு எண் ஆகியவை அடங்கிய முகப்புச்சீட்டு தைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்திலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில் அந்தந்த பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்றால் அருகில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை இந்த பணிக்கு பயன்படுத்துவது வழக்கம்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சேலம் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் 11, 12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக மாணவ மாணவிகள் தயாராகி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரல்

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு உள்ளதாக காலை 8 மணிக்கு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பயிலக்கூடிய மாணவிகளை விடைத்தாளில் முகப்பு தாள் தைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. 

முதன்மை கல்வி அலுவலர் அதிரடி

இந்த நிலையில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், வீடியோ தொடர்பாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து சேலம் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் சிறப்பு தையல் ஆசிரியர் செல்வி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.