14 எதிர்க்கட்சிகளின் மனுக்களை விசாரிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் மறுப்பு.! 

website post - 2023-04-05T185902

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை எஜென்சிகளை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் 95% எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதானதுதான். இந்த வழக்குகளில் வெறும் 23% பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான் எனவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்தார். சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணைகளில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விதி விலக்கு தர வேண்டும் என்பதுதான் மனுதாரரின் கோரிக்கையா என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளித்த அபிஷேக் மனு சிங்வி, எந்த ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கும் பாதுகாப்பு கேட்கவோ, பாதுகாப்பு தர வேண்டும் என்றோ இந்த வழக்கு தொடரப்படவில்லை. மத்திய அரசானது விசாரணை ஏஜென்சிகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. இதனால் ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுகிறது என்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சந்திரசூட், இத்தகைய மனுக்கள் அரசியல்வாதிகளுக்கு அவசியமானதாக இருக்கலாம். பொதுமக்களுக்கு நலன் தரக் கூடியதோ அல்லது உரிமைகளைப் பாதிக்கக் கூடியதோ அல்ல. உச்சநீதிமன்றத்தின் முன் இத்தகைய வழக்குகள் வரும் போது நீதித்துறை கடமையை செய்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில்தான் எழுப்ப முடியும் என்றார். இதனால் 14 எதிர்க்கட்சிகளின் மனுவை ஏற்க மறுத்து மனுவை டிஸ்மிஸ் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.