பல தரப்பினரையும் கவர்ந்த முதல்வரின் புகைப்பட கண்காட்சி

cm photo exhibition

திரைபிரபலங்களின் வருகை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வதுபிறந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " என்ற தலைப்பின் கீழ் நடைபெற்று வரும் கண்காட்சியை கடந்த  23ம் தேதி இளைய திலகம் நடிகர் பிரபு தொடங்கி வைத்தார். இந்த கண்கட்சியை பலரும் பார்வையிட்டு வரும் நிலையில், அண்மையில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சிக்கு வருகை தந்து இப்புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிலையில், பொதுமக்களைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளும், இதனை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். 

தத்ரூபமான வடிவமைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொது வாழக்கையில் அவர் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிகழ்வுகளும்  தத்ரூப காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

திமுகவின் வரலாற்றுப் படங்கள்

இந்த கண்காட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பங்கேற்ற  மாநாட்டு புகைப்படங்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் என திமுகவின் வரலாற்றை நினைவுபடுத்தும் விதமான புகைப்படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 

செல்ஃபி எடுத்து மகிழும் மாணவ, மாணவிகள்

இந்த புகைப்படங்களை பார்வையிடுவதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள திமுக தொண்டர்கள், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் ஆர்வமுடன் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தும்  செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.