திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்-ஐ திணறடித்த தொண்டர்கள்.. திருப்புமுனையாக மாறிய திருச்சி மாநாடு!   

ops new

ஒற்றைத் தலைமை விவகாரம் முடிவு பெற்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று, இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றியநிலையில், ஓபிஎஸ் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். அந்தவகையில், பல்வேறு சட்ட சிக்கல்களைத் தாண்டி தற்போது திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் முப்பெரும் விழா மாநாடு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த மைதானத்தில் சென்னை அதிமுக தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு 20 ஆயிரம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகிறார்கள். மாநாட்டில் மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார் வேடமிட்டு குதிரை சவாரிகளுடன் ஓபிஎஸை திருச்சியில் திணறடித்து வருகிறார்கள்.  

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடக்கும் ஜி கார்னர் மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மாநாடு நடத்தியுள்ளார். திருச்சி தமிழகத்தின் மையமாக இருக்கிறது. இதனால் எந்த முக்கிய நகரங்களாக இருந்தாலும் அங்கிருந்து 4 மணி நேரத்தில் திருச்சி வரலாம் என்பதால் ஓபிஎஸ் திருச்சியை தேர்வு செய்திருக்கிறார் என்கிறார்கள். மேலும் திருச்சி மாநாடு திருப்பு முனை மாநாடாக அமையும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். அவர்கள் சொன்னதுபோல், தற்போது திருச்சி மாநாட்டில் ஓபிஎஸிஸ்கு அளிக்கப்பட்டு வரும் வரவேற்புகளைப் பார்த்தால் ஓபிஎஸின் வரலாற்றை இந்த மாநாடு திருப்பிபோடும் என்று தான் கணிக்க முடிகிறது.