பாஜக அரசு ரூ.15 லட்சம் வழங்குவோம் என்று சொன்னார்கள்.. ரூ.15 கூட தரவில்லை.. மக்களவையில் எம்.பி. டி.ஆர். பாலு பேச்சு.!

ccgghhrr

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டது எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று (ஆக-08) நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

எம்.பி.டி.ஆர்.பாலு பேச்சு

பின்னர், மக்களவை கூடியது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அப்போது பேசிய எம்.பி.டி.ஆர்.பாலு "நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்தார். 

மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2000 கோடி ஒதுக்க முடியவில்லை என்றும், ரூ.15 லட்சம் அனைவருக்கும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை ரூ.15 கூட தரவில்லை" என்று பேசினார். மேலும், கச்சத்தீவு விவகாரம், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி பேசினார். 

திருமாவளவன் உரை

இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் திருமாவளவன் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், "மணிப்பூர் வன்முறையில் பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் விவகாரம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்து ராஷ்டிரா அமைப்போம், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்தொழிப்போம், அதற்காகவே ஆயுதம் ஏந்தியுள்ளோம் என்று பாஜகவினர் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

குஜராத், ஹரியானா மட்டுமல்ல, ஜெய்ப்பூர் ரயிலில் காவலர் ஒருவர் இஸ்லாமியர்களைத் தேடிச் சென்று, 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்தியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அஞ்சி, அஞ்சி வாழும் அவலம் இருக்கிறது. சிறுபான்மையினர் மட்டும் பாதிக்கப்படவில்லை, பெரும்பான்மை இந்து சமூகத்தினரும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு, தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது. SC\ST மற்றும் OBC மக்களுக்கான இடஒதுக்கீடு நிரப்பப்படவில்லை; கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டே இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இவை அனைத்திற்கும் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி பதவி விலக வேண்டும்" என்று பேசினார்.