ஒரே நேரத்தில் மூன்று பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்.. சீமான் மனு.!

ther

விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக 3 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. 

நடிகை விஜயலட்சுமி வழக்கு

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், அந்தப் புகார் குறித்து செப்-09-ம் தேதி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வந்து விளக்கமளிக்க வேண்டுமென்று சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அன்றைய தினம் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததிய மக்களை இழிவாக பேசியதாக சீமான் மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் அன்றைய தினம் ஈரோட்டில் ஆஜராக வேண்டியிருந்ததால், இந்த வழக்கில் ஆஜராக முடியவில்லை என்றும், வேறொரு தேதியில் வந்து ஆஜராகிறேன் என்று சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சீமான் ஆஜராகவில்லை

அதையடுத்து, நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் வழக்கில் ஆஜராக இரண்டு தினங்களுக்கு முன்பு சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. அந்தவகையில், சீமான் அன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீமான் ஆஜராகமல் அவருடைய வழக்கறிஞர்கள், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி காவல் ஆணையரிடம் விளக்கம் அளித்தனர். 

ஏன் ஆஜராகவில்லை - சீமான் விளக்கம்

அதையடுத்து, தான் ஏன் ஆஜராகவில்லை என்பதற்கான காரணத்தை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட கடிதத்தில் உள்ள தகவல் வெளியானது. அதில், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள், வேறு ஒரு அரசியல் வழக்கில், ஆஜராக வேண்டி உள்ளதால் தற்போது ஆஜராக இயலவில்லை என்றும், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற ஆவணங்களின் நகலை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வழக்கு சம்பந்தமாக தன் சார்பில் தாங்கள் முன், ஆஜராக எனது வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளேன் என்றும், வழக்கு ஆவணங்களை தனக்கு அளித்தால் மட்டுமே போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர முடியும் என்றும், ஆவணங்கள் தரப்படாமல் விசாரணைக்கு தான் ஆஜராவது எந்த பலனையும் அளிக்காது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார். 

மீண்டும் சம்மன் - சீமான் மனு

சீமான் அன்று ஆஜராகதநிலையில், இன்று செப்-14 காவல்துறை சம்மன் அனுப்பியது. இந்தநிலையில், விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக 3 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

லட்சுமி இருவரும் என் முன் நிற்க வேண்டும்

அந்த மனுவில், "ஒரே நாளில், ஒரே சமயத்தில் நான், விஜய லட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோரை வைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் மூவரையும் விசாரணை செய்து குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என விஜய லட்சுமி புகாரில் தனக்கு அளிக்கப்பட்ட சம்மனை அடுத்து, காவல்துறைக்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், என் மேல் குற்றச்சாட்டு வைக்கும் விஜய லட்சுமி, வீரலட்சுமி இருவரும் என் முன் நிற்க வேண்டும் என்றுள்ளார்.

மேலும், கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சனை இருப்பதால் ஒவ்வொரு மணிநேரமும் எனக்கு முக்கியானது. விஜய லட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகிய இருவரின் குற்றசாட்டிலும் உண்மையும் அடிப்படையும் இல்லை. நான் விசாரணைக்கு வரும்போது எனக்கு எதிராக காணொளிகளை வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள் . பொதுவெளியில் என்ன பற்றி பேசி என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலையை செய்கின்றனர்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.