டன் கணக்கில் சோறு.. கீழ கொட்டி கிடக்குது பாரு.. அதிமுக மாநாட்டின் அலங்கோலம்.!

soru

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று ஆக-20 ஞாயிற்றுக்கிழமையன்று மதுரை மாவட்டம் வளையாங்குளம் பகுதியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரம்மாண்ட மேடை, நீண்ட தூரம் பந்தல், மூன்று வேலை உணவு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை நினைவுப்படுத்தும் வகையில் அதன் மாதிரிகள் என அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு கின்னஸ் சாதனை பெறும் என்றெல்லாம் அதிமுக அமைச்சர்கள் பேசி வந்தனர்.    

அதிமுக மாநாட்டில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியது. குறிப்பாக, அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்படும் உணவு பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான சமையல் கலைஞர்களை வைத்து, மூன்று கூடங்கள் அமைத்து தொண்டர்களுக்கு சிரமம் இல்லாமல், பல வகையான உணவு வகைகளை வழங்கியிருந்தது முக்கியத்துவம் பெற்றது. அதிமுக மாநாட்டில் 25 லட்சம் பேருக்கு அதிகமாக கலந்துகொள்வர்கள் என்று அதிமுக அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கேற்றாற்போல, உணவுகளையும் சமைக்க தயார் செய்திருந்தனர் அதிமுகவினர். 

ஆனால், அதிமுக எழுச்சி மாநாட்டில் அத்தனை லட்சம் பேர் கலந்துகொள்ளவில்லை என்பது வெட்டவெளிச்சம். ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் அதிமுக எழுச்சி மாநாட்டில் அதிமுக ஒட்டுமொத்த தொண்டர்களில் கால் சதவீதம் கூட பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கிறார். தோராயமாக, 70 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றிருப்பார்கள் என்று தெரிவிக்கிறார். இன்னும் பெரும்பாலான தொண்டர்கள் போக்குவரத்து நெரிசலின் காரணமாக திரும்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து, ஒரு விஷயத்தை முக்கியமாக பார்க்க வேண்டியிருக்கிறது. 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் 10 லட்சம் பேருக்கு அதிகமாக மாநாட்டில் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என தொடர்ந்து தெரிவித்து வந்தனர். அதனடிப்படையில் தான் உணவுகளும் தயார் செய்யப்பட்டிருக்கும். அதன்போல், டன் கணக்கில் உணவுகளும் தயார் செய்யப்பட்டது. பல வகையான உணவுகளும் தயார் செய்யப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கடி சுவையான உணவு திருப்திகரமாக வழங்கப்படும் என்று பத்திரிக்கைகளில் தெரிவித்து வந்தார். 

ஆனால், மாநாடு ஆரம்பித்த காலையிலேயே உணவு தரமற்றதாக இருந்ததாக தொண்டர் ஒருவர் குமுறும் வீடியோ வெளியாகி மாநாட்டின் அலங்கோலம் பல்லிழிக்கச் செய்தது. இதனால், டன் கணக்கான உணவுகள் கீழே கொட்டப்பட்டுக் கிடந்த வீடியோவும் போட்டோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இது தமிழகம் முழுவதும் முகம் சுழிக்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல், பல வகையான காய்கறிகளும் கீழே கொட்டப்பட்டு கிடந்ததை பார்க்க முடிந்தது. அதிமுக எழுச்சி மாநாடு ஒரு பக்கம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும், இன்னொரு பக்கம் மாநாட்டில் உணவுகள் டன் கணக்கில் கீழே கொட்டப்பட்ட சம்பவம் அதிமுக மாநாட்டின் அலங்கோலமாகத்தான் பார்க்கப்படும்.