பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா திடீர் விலகல்! 

Annamalai Siva

பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவராக இருந்த திருச்சி சூர்யா சிவா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

திமுகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா

திமுகவின் நீண்டகால மாநிலங்களவை உறுப்பினரும், கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா, திமுகவில் பிரபலம் அடைய முடியவில்லை என்றும், கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் கூறி, திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தவுடன் திமுக மீது சரமாரியாக பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். குறிப்பாக கனிமொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததற்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்பது போல குற்றம்சாட்டினார். அதுமட்டும் இல்லாமல் பல அமைச்சர்களின் ரகசியங்களை வெளியிடுவேன் எனவும் கூறி பகிரங்கமாக மிரட்டி வந்தார். 

பாஜகவில் பொறுப்பு 

இந்நிலையில் திமுகவில் இருந்து வந்த நபர், அதுவும் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் மூத்த மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் என்பதால் அவருக்கு பாஜகவில் அதீத அங்கீகாரம் வழங்கப்பட்டது. கட்சியில் சேர்ந்த ஓராண்டுக்குள் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டது மட்டும் இல்லாமல் பாஜகவின் மாநிலத் தலைவராக விஸ்வரூப வளர்ச்சி அடைந்தாரோ அதைப்போல, திருச்சி சூர்யாவும் பாஜகவில் இணைந்த சில மாதங்களிலேயே மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார் . 

சர்ச்சைகளை கிளப்பிய திருச்சி சூர்யா

மத்தியில் அதிக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் கட்சி என்பதால், தனது பலத்தையும் அதிகாரத்தையும் வளர்த்துக்கொள்வதற்காக, மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கத்தை கூட்டினார் திருச்சி சிவா. இதனால் பல சர்ச்சைகளும் வெடித்தன. குறிப்பாக திருச்சியில் தனியார் பேருந்தை கடத்தியது, கொலை மிரட்டல், அடாவடித்தனம் என திருச்சி சூர்யா மீது பல வழக்குகள் பாய்ந்தன. கட்சிக்கு வெளியே மட்டும் இல்லாமல், கட்சிக்கும் உள்ளேயும், பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். 

குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜகவின் சிறுபான்மை அணியின் மாநிலத் தலைவர் திருமதி.டெய்சி அவர்களிடம் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் பேசி சண்டை போட்ட ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்ததாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் ஆறு மாதங்களுக்கு கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்து இருந்தார். 

கேசவ விநாயகம் மீது குற்றச்சாட்டு

பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் குறித்து திருமதி டெய்சியுடனான தொலைப்பேசி உரையாடலில், மிகவும் ஆபசமான குற்றச்சாட்டை முன்வைத்தார் சூர்யா. இது பாஜகவினர் இடையே மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சிலர் கேசவ விநாயகத்திற்கு ஆதரவாகவும் சிலர் கேசவ விநாயகத்திற்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு பாஜகவின் முக்கிய தலைவராக விளங்கிய கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்ட, மதன் ரவிச்சந்திரன் கேசவ விநாயகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாஜகவில் இருந்து விலகல்

இந்நிலையில் இன்று பாஜக உடனான தனது உறவை முடித்துக்கொள்வதாக திருச்சி சூர்யா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதில், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என தெரிவித்துள்ளார். 

 

ஏற்கெனவே 2021 தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், மதுரை மருத்துவர் சரவணன் ஆகியோர் பாஜகவின் செயல்பாடுகள் பிடிக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இதில் கு.க.செல்வத்திற்கு மட்டும் மீண்டும் திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி சூர்யாவும் பாஜகவி இருந்து விலகியுள்ளார். திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைச்சாமி, பாஜகவில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.