தமிழ்நாடு அரசுக்கு டி.டி.வி.தினகரன் கோரிக்கை..! 

TTV Dhinakaran

வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

வடமாநில தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் வேலை பார்த்த ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனா பொது ஊரடங்கின்போது நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு நோக்கி அவர்கள் படையெடுக்க தொடங்கினர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் வருகையால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாகவும், வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைப்போல சமீபத்தில் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் கோவை தனியார் கல்லூரியில் வடமாநில தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. இதனால் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

டிடிவி தினகரன் அறிக்கை

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன.
மேலும், அவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.