”அவசர அமைச்சரின் ஆணவத்துக்கு முடிவு ஏற்படும்” - டிடிவி காட்டம்!

TTV and Udhayanidhi

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து உதயநிதி பேசியதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒன்றியமும் மாநிலமும்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ”ஒன்றியமும் மாநிலமும்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய உதயநிதி, ஜெயலலிதா ஏ1, சசிகலா ஏ2 என கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

என்ன பேசினார் உதயநிதி?

”திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால் அது சட்டத்துறை தான். இளைஞர் அணி, மாணவர் அணி என்றெல்லாம் நானே கூறியிருக்கிறேன். ஆனால், திமுகவின் சட்டத்துறை கடினமான காலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஏ1 ஆகவும், அவருடைய நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது இந்த சட்டத்துறை தான். அண்ணாவுக்கு அருகில் உறங்க வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசையை கடுமையாக பாடுபட்டு, நிறைவேற்றி காட்டியது இந்த சட்டத்துறை தான்” என்று உதயநிதி பேசினார். 

தமிழ்நாட்டின் பெயரை மாற்றி இருப்பார்கள்

மேலும் பேசிய அவர், “இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு என இருக்க வேண்டாம். தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் என்ன நிலைமை இருந்தது. அதிகாரக் குவியல். கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தெரியவில்லை.  அவரது எதிரிகள் எல்லாம் அவரது  பின்னாலேயே இருந்துள்ளார்கள். இதுதான் அதிகாரப் பரவலுக்குமான அதிகாரக் குவியலுக்குமான வித்தியாசம்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

டிடிவி கண்டனம்

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து உதயநிதி பேசியதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”திமுகவின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அவசர அமைச்சர், அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திமுகவினர் அம்மா அவர்களை வீழ்த்த பல்வேறு உத்திகளை எடுத்து செயல்பட்டபோதிலும், அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வரை மக்கள் மன்றத்தின் முன் தீயசக்திகளால் அவரை வெல்லமுடியவில்லை. அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும். இன்று அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தின் உச்சத்தில் இவரை போன்றோர் பேசிவருகின்றனர். ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்” என டிடிவி தினகரன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.